கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம் பக்தர்களுக்கு அனுமதியில்லை

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.

Update: 2020-05-28 04:42 GMT
அழகர்கோவில், 

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் நடைபெற இருந்த பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெறாமல், கோவில் வளாகத்தில் ஆண்டாள் சன்னதி முன்பாக ஒரே நாளில் நடந்து முடிந்து விட்டது. தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா வழக்கம் போல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று மாலை கோவிலில் இந்த திருவிழா தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பாடு ஆனது. இதைதொடர்ந்து 4-ம் பிரகாரம் சுற்றி வந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக சுவாமி வந்து நின்றது. அங்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அதே பரிவாரங்களுடன் சென்று வசந்த மண்டபத்திற்கு போய் எழுந்தருளியது. தொடர்ந்து அங்கு தேவியர்களுக்கும், பெருமாளுக்கும் விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந் தது. சர்வ அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார்.

அனுமதியில்லை

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்ட கோவில் பட்டர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்து சுவாமி வந்த வழியாகவே பல்லக்கில் சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தது.

இந்த திருவிழாவானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை மேலாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்