விருதுநகர் மெயின் பஜாரில் காய்கறி, பழ கடைகள் வைத்தால் நடவடிக்கை நகரசபை கமிஷனர் எச்சரிக்கை

விருதுநகர் மெயின் பஜார் மற்றும் உள்தெரு பகுதியில் காய்கறி மற்றும் பழ விற்பனை கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் பார்த்தசாரதி எச்சரித்துள்ளார்.

Update: 2020-05-28 04:53 GMT
விருதுநகர், 

விருதுநகரில் ஊரடங்கு தொடங்கியவுடன் மெயின் பஜாரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியுடன் காய்கறி கடைகள் வைக்க இடவசதி இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் விருதுநகர் புதுபஸ் நிலையம், கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகம், உழவர்சந்தை, அல்லம்பட்டி முக்குரோடு, மின்வாரிய அலுவலகம் அருகில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. புது பஸ் நிலைய பகுதியில் மொத்தமாக காய்கறி வாங்குபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் சிலர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து மொத்தமாக காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி வந்து மெயின்பஜாரில் உள்ள மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய தொடங்கினர். நகராட்சி அதிகாரிகள் இதற்கு அனுமதி இல்லை என கூறிய போதிலும் தொடர்ந்து அப்பகுதியில் காய்கறி விற்பனையை செய்து வரும் நிலை உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து நகரசபை கமிஷனர் பார்த்தசாரதி கூறும் போது, காய்கறி விற்பனை மையங்களில் சமூக இடைவெளி இல்லாமல் விற்பனை நடைபெறுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் நகரின் பல்வேறு இடங்களில் காய்கறி விற்பனைக்கு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் காய்கறி வியாபாரிகளுக்கும் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர நகரசபை நிர்வாகம் தயாராக உள்ளது.

இந்தநிலையில் அனுமதி இல்லாமல் விருதுநகர் மெயின்பஜார் மற்றும் உள்தெருவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய சிலர் தொடங்கி உள்ளனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மார்க்கெட் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்