லாரிகளில் மணல் கடத்தல்; 33 பேர் கைது

கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி வந்த 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-29 05:03 GMT
காட்டுமன்னார்கோவில்,

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரவு நேரத்தில் லாரிகளில் மணல் அள்ளி கடலூர் வழியாக விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணல் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு முதல் லால்பேட்டை வரை உள்ள இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 33 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வந்து கொண்டிருந்தன. இதை பார்த்த தனிப்படை போலீசார், அந்த லாரிகளை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் நடுரோட்டிலேயே லாரிகளை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் தனிப்படையினர், இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் 33 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் ஆதிவராகநத்தத்தை சேர்ந்த குமார் (வயது 32), கவிதாஸ்(36) சிதம்பரம் பின்னத்தூர் கலைவாணன்(27), புவனகிரி ஜோதிபாசு(37), பண்ருட்டி மருங்கூரை சேர்ந்த விஜயகுமார்(30), வடலூர் காட்டுக்கொள்ளையை சேர்ந்த தேவராஜ்(28), கோவிந்தன்(55), குருசாமி(26), விருத்தாசலம் பீக்கங்குப்பத்தை சேர்ந்த பஞ்சாட்சரம்(28), மருவாய் முருகன்(25) உள்பட 33 பேர் என்பதும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மணல் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து குமார், கவிதாஸ் உள்ளிட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்