வெளியே சென்று விளையாட முடியாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட முடியாததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-05-29 22:15 GMT
மும்பை, 

மும்பை மிரா ரோடு பகுதியில் 12 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்தான். சம்பவத்தன்று சிறுவன் நள்ளிரவு 1.30 மணியளவில் அவனது அறைக்கு தூங்க சென்றான். மறுநாள்  காலை 7 மணியளவில் சிறுவனின் அறைக்கு பெற்றோா் சென்றபோது, அவன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தான். உடனடியாக பெற்றோர் அவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் சிறுவன் விரக்தியில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலை சிறுவன் தனது நண்பர்களிடம் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து உள்ளான்.

இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ‘‘எனது மகன் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் தினமும் மாலையில் சைக்கிளில் சுற்றுவான். பூங்காவில் விளையாடுவான். ஊரடங்கு காலத்தில் வெளியே செல்ல வேண்டும் என கூறுவான். நாங்கள் அனுமதிக்கவில்லை. வீட்டிலேயே இருப்பதால் அவன் மோசமான மன உளைச்சலில் இருப்பான் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. தெரிந்து இருந்தால் அவனை விளையாட வெளியே அழைத்து சென்று இருப்போம்’’ என்றார்.

மேலும் செய்திகள்