பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; புதுச்சேரி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான வரிஉயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.

Update: 2020-05-29 23:13 GMT
புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்கள் மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூடுதல் வரிகளை விதித்து தொல்லை கொடுத்து வருகிறார். மதுபானம், போக்குவரத்து துறை மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் பெற வாய்ப்பு இருந்தும் கொரோனா வரி என்ற பெயரில் மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தான் பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவையில் 3,000 ஆம்னி பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் வேறு மாநிலங்களில் தான் ஓடுகின்றன. அவற்றுக்கான வரியை உயர்த்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபோது பல போராட்டங்களை காங்கிரஸ் அரசு நடத்தியது. ஆனால் தற்போது புதுவை அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தி உள்ளது. பொது போக்குவரத்து தடை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது அவர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விலை உயர்வை புதுவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறும் அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுவை மாநில அ.ம.மு.க. செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் எந்த வருமானமும் இல்லாமல் தவிக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கே அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஊரங்கின்போது 2-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி பொதுமக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்திருப்பது வேதனை அளிக்கிறது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் கேபிள் டி.வி, மதுபான விற்பனை ஆகியவற்றை அரசு சார்ந்த நிறுவனமாக்கி அதன் மூலமாக அரசு தனது வருவாயை பெருக்கலாம். ஆனால் பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும். மதுபானம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான வரி உயர்வால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், ‘புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த 50 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி உள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாற்றுவழியை அரசு யோசிக்க வேண்டும். இந்த வறுமைக் காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரலாறு காணாத விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கால் வேலையில்லா திண்டாட்டம், மக்களின் வாங்கும் சக்தி பல மடங்கு குறைந்துள்ளது. தொழிலதிபர்கள் வைத்திருக்கும் வரி பாக்கி, மின் கட்டணம், கலால் வரி பாக்கிகளை அரசு உடனே வசூலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை முதல்-அமைச்சரும், கவர்னரும் உடனடியாக திரும்பபெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்