நாட்டு துப்பாக்கியால் அண்ணனை தாக்கி விட்டு தலைமறைவான விவசாயி கைது

ஏரியூர் அருகே நிலத்தகராறில் நாட்டு துப்பாக்கியால் அண்ணனை தாக்கிவிட்டு தலைமறைவான விவசாயியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2020-05-30 00:53 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள தொட்டகுட்டஅள்ளி ஊராட்சி பாயப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 60). இவருடைய தம்பி கண்ணுபையன் (45). விவசாயிகளான இவர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 20-ந்தேதி நிலம் தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணுபையன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் அண்ணன் மாதையனை நோக்கி சுட்டார்.

இதில் அதிஷ்டவசமாக தோட்டா மாதையன் மீது பாயவில்லை. அதன்பின்னர் நாட்டுத்துப்பாக்கியால் மாதையனை தாக்கிவிட்டு கண்ணுபையன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மயங்கி கிடந்த மாதையனை அவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மேகலா மேற்பார்வையில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான கண்ணுபையனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தொட்டகுட்டஅள்ளி வனப்பகுதியில் கண்ணுபையன் பதுக்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த கண்ணுபையனை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்