குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-30 05:30 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், சி.தண்டேஸ்வர நல்லூர் பகுதியில் கொட்டப்படுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புகளில் மக்கள் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் நகராட்சி ஊழியர்கள், குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதால் தங்கள் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து வெளியில் நடமாட முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்