திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை

புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-05-31 01:32 GMT
புதுச்சேரி,

புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது35). இவர் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவில் தற்போது அவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 28 -ந் தேதி உறவுக்கார பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு வந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் விரைந்து சென்றார். அங்கிருந்து பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போலீஸ்காரர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. அவருக்கு குடும்ப பிரச்சினை ஏதேனும் இருந்ததா? இல்லையெனில் பணிச்சுமையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்