பல்லடம் அருகே சூறைக்காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன மரங்கள் வேருடன் சாய்ந்தன

பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஏராளமான மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்தன.

Update: 2020-05-31 05:04 GMT
திருப்பூர்,

பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஏராளமான மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்தன.

சூறைக்காற்றுடன் மழை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சிங்கனூர் புதூர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அன்று இப்பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் சண்முக சுந்தரம் என்பவர் வீட்டின் தகரத்தால் ஆன மேற்கூரை சூறைக்காற்றில் முற்றிலும் பெயர்ந்தது. அந்த தகர மேற்கூரை சுமார் 20 அடி தூரம் சென்று பறந்து விழுந்தது.

மேலும் இந்தச் சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதேபோல் இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுத்தொழுவத்தின் மேற்கூரை சூறைக்காற்றில் சேதமடைந்து தூக்கி வீசப்பட்டது. அவரது தோட்ட பகுதியில் இருந்த வேலமரம் மற்றும் வேப்ப மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.

மரம் விழுந்தது

மேலும் வெள்ளியங்கிரி என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருந்த வேல மரம் வேருடன் பெயர்ந்து வீட்டின் மேல் விழுந்தது. இதில் வீட்டின் ஓடுகள் சேதம் அடைந்தது. பல்லடம் சிங்கனூர் புதூர் பகுதியில் வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்