கொரோனா ஊரடங்கு வாகன சோதனையில் போலி பதிவுஎண் வாகனங்கள் கண்டுபிடிப்பு திருட்டு வாகனம் விற்பவர்களை பிடிக்க தனிப்படை

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி பதிவு எண் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

Update: 2020-05-31 23:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் இங்கு விற்கப்பட்டு போலி நம்பர் பிளேட்கள் பொருத்தி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்குமுன் இதுபோன்று வெளிமாவட்டங்களில் திருடப்பட்ட வாகனத்தை இங்கு வாகன சோதனையின்போது அபராதம் செலுத்திய நிலையில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது ஏராளமான இருசக்கர வாகனங்கள் இதுபோன்று திருடி விற்கப்பட்டு இங்குள்ளவர்களின் பதிவு எண் பொருத்தப்பட்டு வலம்வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிமாவட்டங்களில் திருடப்பட்ட வாகனங்களை ராமநாதபுரம் மாவட்ட பதிவு எண் பொருத்தி இங்குள்ளவர்களிடம் விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தனிப்படை

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் மூலம் பல வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. வெளிமாவட்டங்களில் திருடப்படும் வாகனங்களை மர்ம நபர்கள் எந்த மாவட்டத்தில் வாகனத்தை விற்பனை செய்கிறார்களோ அந்த மாவட்டத்தை சேர்ந்த ஏதாவது ஒரு பதிவு எண்ணை பொருத்தி விற்பனை செய்து விடுகின்றனர்.

இதுபோன்று பல வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்கப்பட்டு போலி பதிவு எண்களுடன் உலா வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வாகனத்தை வாங்கியவருக்கே அது போலி பதிவு எண் கொண்ட திருட்டு வாகனம் என்பது அதுவரை தெரிவதில்லை. ஏனெனில் ஆவணங்கள் நிதிநிறுவனத்தில் உள்ளது வாங்கி தருகிறோம் என்பது போன்ற காரணங்களை கூறி ஏமாற்றி விற்றுவிடுகின்றனர். வாகன சோதனையில் ஆவணங்களை சரிபார்க்கும் போதுதான் இதுதெரிகிறது. இந்த திருட்டு வாகன விற்பனையில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக தெரியவந்துள்ளதால் தனிப்படை அமைத்து விசாரசணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்