ஊழியருக்கு கொரோனா தொற்று: சட்டசபை வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

புதுச்சேரியில் சட்டசபை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணியாற்றிய அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. சட்டசபையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-02 00:04 GMT
புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. அடுத்தடுத்த ஊரடங்கின்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 5-ம் கட்டமாக ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு 3 பேருக்கு மட்டுமே இருந்தது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகமாகி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை இந்த எண்ணிக்கை 74 ஆக இருந்தது. இதில் ஜிப்மர் டாக்டர், கர்ப்பிணி, 9 வயது சிறுவன், விமான நிலைய ஊழியர், மதுக்கடை உரிமையாளர், சட்டசபை ஊழியர் ஆகியோரும் அடங்குவர்.

புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள அமைச்சரவை அலுவலக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து சட்டப்பேரவை செயலகம், அமைச்சர்களின் அலுவலக ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

இதையொட்டி தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் பணிபுரிந்த சட்டசபை வளாகத்தில் 3-வது மாடியில் உள்ள அலுவலகம் மூடப்பட்டது. அங்கு வேலைபார்த்து வரும் மற்ற ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை நகராட்சி ஊழியர்கள், சட்டசபை வளாகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள், லிப்டுகள் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்