கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவிலை திறக்க வேண்டும் வர்த்தகர்கள் கோரிக்கை

பழனி முருகன் கோவிலை சில கட்டுப்பாடுகளுடன் விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.

Update: 2020-06-02 23:18 GMT
பழனி, 

பழனி அடிவாரம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வக்குமார், மாநில தலைமை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பழனி முருகன் கோவில் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக பழனிக்கு பக்தர்கள் வரவில்லை. பழனிக்கு வரும் பக்தர்களை நம்பியே அடிவாரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் வருகிற 8-ந்தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் மாநில அரசு மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டு தலங்களுக்கான தடை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பழனி முருகன் கோவிலை சில கட்டுப்பாடுகளுடன் விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்க வேண்டும். அத்துடன் தரிசனத்துக்காக அவர்கள் வரிசையில் காத்திருக்க நேர்ந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கும் வகையில் கோவில் நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் பக்தர்களும் சாமி தரிசனம் செய்யலாம். வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்