வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு

பெங்களூருவில் வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற திருடனை பொதுமக்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த திருடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Update: 2020-06-03 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம்(மே) 31-ந் தேதி இரவு ஒரு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அந்த வாலிபரிடம் இருந்த செல்போனை பறித்தனர். உடனே அந்த வாலிபர், திருடன், திருடன்...என்று கூச்சலிட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 நபர்களையும் விரட்டி சென்றனர். அவர்களில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து வாலிபரிடம் பறித்த செல்போனை மீட்டனர்.

அதே நேரத்தில் மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இதற்கிடையில், பிடிபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்தனர். அவரை அடித்து, உதைத்து பலமாக தாக்கினாாக்ள். இதுபற்றி அறிந்ததும் கொத்தனூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டனர்.

பின்னர் பலத்த காயம் அடைந்திருந்த அந்த நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த நபர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் சுல்தான்(வயது 28) என்பதும், அவர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கொத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அதே நேரத்தில் தப்பி ஓடிய சுல்தானின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்