ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.

Update: 2020-06-04 01:18 GMT
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடி கிராமத்தில் 25 வயதுடைய பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கடந்த 31-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை குடும்பத்தினர் எடுத்து சென்று அடக்கம் செய்து விட்டனர்.

இதனிடையே மருத்துவ பரிசோதனை முடிவில் அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெரியதள்ளப்பாடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளதா? என தீவிர பரிசோதனை செய்தனர்.

மேலும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இறந்த பெண்ணின் துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 9 பேர் அரசு பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பெரியதள்ளப்பாடியை சேர்ந்த பெண் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 31-ந்தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடிவு வருவதற்குள் அவர் இறந்து விட்டார். தற்போது வந்துள்ள மருத்துவ பரிசோதனை முடிவில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது, என்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெண் இறந்த சம்பவம் பெரிய தள்ளப்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்