மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கின்றனர்: துறைமுகத்தில் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தடைக்காலம் முடிந்து மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மீன்வளத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Update: 2020-06-05 00:06 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படகுகள் சீரமைக்கப்படாதது, ஊரடங்கு மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வரமாட்டார்கள் என்பதால் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்தநிலையில் சுமார் 50 சதவீதம் மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மற்ற மீனவர்கள் படிப்படியாக படகுகளை பழுது நீக்கி கடலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முத்துமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் இன்று மீன்பிடிக்க செல்கிறார்கள். நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2 மணி முதல் மாலை 6 மணி வரை துறைமுகத்தில் மீன்கள் மொத்த விற்பனை நடைபெறும்.

புதுச்சேரி மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் மட்டுமே மொத்தமாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவர். முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தனிப்பட்ட தேவைக்காக மீன்கள் வாங்க வரும் தனி நபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்கள் வசிப்பிட பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள், வியாபாரிகளிடமே மீன்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்