அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி விசைத்தறிகளை இயக்கினால் நடவடிக்கை ; கலெக்டர் எச்சரிக்கை

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி விசைத்தறிகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2020-06-05 06:44 GMT
ஈரோடு,

ஈரோடு, மாணிக்கம்பாளையம், சூளை, சோலார், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் செயல்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக விசைத்தறிகள் செயல்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில், விசைத்தறிகளை 10 மணிநேரம் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கூடுதல் நேரம் விசைத்தறிகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தினமும் 14 மணிநேரம் விசைத்தறிகளை இயக்கி கொள்ளலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

மேலும், விசைத்தறிகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர, அதாவது இரவு 8 மணிக்கு பிறகு இயக்கப்படுவது தெரியவந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய் தொற்று பரவல் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் விசைத்தறி கூடத்துக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக விசைத்தறி கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்