கிராமிய கலைஞர்கள் அரசின் நிதி உதவியை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிரண்குராலா தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமிய கலைஞர்கள் அரசின் நிதி உதவியை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-08 01:51 GMT
கள்ளக்குறிச்சி,

தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமிய கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இசை கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் 500 பேருக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் நிதி உதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தனிப்பட்ட கலைஞரின் வயது 31.3.2020 அன்றைய தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்