மருதையாற்றின் புதிய நீர்தேக்கம் மூலம் 4,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் அதிகாரி தகவல்

மருதையாற்றின் புதிய நீர்தேக்கம் மூலம் 4,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-08 05:46 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.92 கோடியே 70 லட்சம் செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. கடந்த 3 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அங்கு கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. இந்ததிட்ட பணியின் ஒரு பணியாக உபரி நீர் வெளியேறும் வாய்க்காலில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

8 கிராமங்கள் பயன்பெறும்

இந்த நீர்த்தேக்க கட்டுமான பணி முடிக்கப்பட்டு பொதுப்பாசன பயன்பாட்டிற்கு வரும் போது நீர்த்தேக்கத்தில் 4.42 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இதன் மூலம் சுமார் 4,194 ஏக்கர் பாசன வசதி பெறுவதால் 4 ஆயிரத்து 830 டன் உணவு உற்பத்தி ஏற்படும். மேலும் இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டப்பாடி, அழகிரிபாளையம் மற்றும் சாத்தனூர் ஆகிய 8 கிராமங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர், அரியலூர் கோட்ட, பெரம்பலூர் உதவிக்கோட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்