விழுப்புரத்தில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-09 04:30 GMT
விழுப்புரம்,

ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், 2020 ஜனவரி மாதம் முதல் முடக்கிய பஞ்சப்படியை திரும்ப வழங்க வேண்டும், ஆள்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தொழிலாளர் நல உரிமைகளை பறிக்கக்கூடாது, ஊதிய உயர்வு, பயணப்படி, போக்குவரத்துப்படி, இரவுப்பணி படி போன்றவற்றை முடக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர் (எஸ்.ஆர்.எம்.யு.) கடந்த 1-ந் தேதி முதல் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தினர், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓபன்லைன் கிளை தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஓபன்லைன் கிளை செயலாளர் ரகுநாத், தலைமை கிளை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயல் தலைவர் பழனிவேல் கண்டன உரையாற்றினார்.

இதில் ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் நாராயணன், பெரியண்ணன், ஜெயசேகர் உள்பட பலர் கருப்பு பட்டை, கோரிக்கை அட்டை ஆகியவற்றை அணிந்தபடி கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்