குன்றத்தூரில் மரக்கிடங்கில் தீ விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர்கள் மலைக்கனி, சிவகுமார். இவர்களுக்கு சொந்தமான மரக்கிடங்கு மற்றும் பிளாஸ்டிக் கதவுகள் செய்யும் கடை குன்றத்தூரில் உள்ளது.

Update: 2020-06-11 00:03 GMT
பூந்தமல்லி,-

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக  இந்த இரு கடைகளும் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மரக்கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள். மரக்கட்டைகள் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் அருகில் உள்ள பிளாஸ்டிக் கதவுகள் செய்யும் கடைக்கும் பரவியது.

இதனால் அம்பத்தூர், விருகம்பாக்கம், ஜெ.ஜெ நகர் போன்ற பகுதிகளில் இருந்து கூடுதலாக 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் போராடி பொக்லைன் எந்திரம் மூலம் கடையின் பக்கவாட்டு சுவர்களை இடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மரக்கிடங்கு மற்றும் பிளாஸ்டிக் கதவு கடை என இரண்டிலும் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பலகைகள், கதவுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது நாச வேலையா என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்