கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,700 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,700 கனஅடியாக அதிகரித்தது.

Update: 2020-06-12 21:45 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒகேனக்கல் நடைபாதைக்கு செல்லும் நுழைவு பாதை மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் நீர்வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,700 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறையினர் பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அருவியில் குளிக்காத வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்