ஊரடங்கு காலத்தில் விதிமுறையை மீறி கடன் வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

ஊரடங்கு காலத்தில் விதிமுறையை மீறி கடன் வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2020-06-13 22:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலவாதிகள் இதுவரை குற்றம் குறை சொல்லவில்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் கூறலாம். அது வரவேற்கக்கூடியது தான். சட்டமன்றம் கூடியபோது அதை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். ஆனால், சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து நடவடிக்கை எடுப்பதற்கு தான். மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு பிரச்சினை என்றதும் பின்வாங்கக்கூடாது என்பதற்கு தான் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அந்த நேரத்திலும் சட்டமன்றத்தை ஒத்திவைத்து விட்டு, நாம் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கூறியவர் எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்றத்தை ஒத்திவைப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே இனி நாங்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சுயநலத்துடன் கூறியவர்கள் தி.மு.க.வினர். ஆனால், முதல்-அமைச்சர் தினமும் தலைமை செயலகம் சென்று மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

சசிகலா

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், அ.தி.மு.க.வில் மாற்றங்கள் எதுவும் இருக்குமா? என்று கேட்கிறீர்கள். அதை பற்றி யோசிக்க நேரமில்லை. கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விக்கு இடமில்லை. அந்த சிந்தனையே ஆளும் அரசுக்கும், யாருக்கும் இல்லை.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் அதிக வட்டி வசூலிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையும் மீறி வசூல் செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்