அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி நாளை தொடக்கம் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டையில் இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

Update: 2020-06-13 20:48 GMT
புதுக்கோட்டை,

அரசு பள்ளி மாணவர்களும் ‘நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் ‘நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவமாணவிகளுக்கு ‘நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தினர் கூறியதாவது:

இபாக்ஸ் எனும் நிறுவனம் மூலம் ‘நீட்' தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. நாளை சோதனை வகுப்புகள் நடைபெறும். ஏற்கனவே பதிவு செய்த மாணவமாணவிகள் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம். அவர்களது இ மெயில் முகவரி உபயோகிப்பாளர் முகவரியாகவும், செல்போன் எண் ரகசிய குறியீடு எண்ணாகவும் பயன்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் மாணவமாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 140க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

வைபை வசதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை தந்து பயன்பெறும் வகையிலும் வைபை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தப்படியும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். முதல் 2 நாட்கள் சோதனை அடிப்படையில் பயிற்சிகள் நடத்தப்பட்ட பின் வருகிற 17ந் தேதி முதல் முறையாக பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இவ்வாறு கூறினர்.

மேலும் செய்திகள்