கீழப்புலியூர் கல் குவாரியில் 80 அடி பள்ளத்தில் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் சாவு

கீழப்புலியூர் கல் குவாரியில் உள்ள 80 அடி பள்ளத்தில் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்தார்.

Update: 2020-06-14 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் ஒரு தனியார் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சேலம் மாவட்டம், வைகுந்தம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சந்தோஷ்(வயது 25) என்பவர் பொக்லைன் ஆபரேட்டராக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை குவாரியின் மேலாளர், சந்தோசுக்கு பார்சல் வந்துள்ளதை கூறுவதற்காக அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அழைப்பை எடுக்காததால் குவாரியில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களை தொடர்பு கொண்டு சந்தோஷ் ஏன் செல்போனை எடுக்கவில்லை என்று கூறி அவர் எங்கே என கேட்டுள்ளார்.

80 அடி பள்ளத்தில்...

அப்போது அவரை காணவில்லை என மற்ற ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை குவாரி ஊழியர்கள் தேடிப்பார்த்தபோது, அவர் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனே இதுகுறித்து குவாரி மேலாளருக்கும், மங்களமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார். கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துவிட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்