ஒரத்தநாடு அருகே பள்ளத்தில் விழுந்த என்ஜினீயர் உடலில் கம்பி பாய்ந்தது அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

ஒரத்தநாடு அருகே பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர் உடலில் கம்பி பாய்ந்தது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் கம்பியை அகற்றினர்.

Update: 2020-06-15 00:52 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தூண்கள் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பு கம்பி நடப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் என்ஜினீயரிங் பட்டதாரி அய்யப்பன் (வயது26) நேற்று முன்தினம் இரவு பள்ளம் அருகே நின்று கொண்டு தனது நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அய்யப்பன் எதிர்பாராதவிதமாக பள்ளத்துக்குள் தவறி விழுந்தார். அங்கு நடப்பட்டிருந்த இரும்பு கம்பி அவருடைய முதுகில் குத்தி பாய்ந்து வயிற்று பகுதி வழியாக வெளியே வந்தது.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அய்யப்பனின் உடலில் பாய்ந்த கம்பியின் ஒரு பகுதியை கட்டர் மிஷின் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் உடலுக்குள் பாய்ந்திருந்த கம்பியுடன் உயிருக்கு போராடிய அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணர் முத்துவிநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அய்யப்பனின் உடலுக்குள் பாய்ந்திருந்த கம்பியை அறுவை சிகிச்சை மூலம் நேற்று அகற்றினர். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்