நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் திரண்ட விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-16 00:09 GMT
கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே ராங்கியன்விடுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது ராங்கியன்விடுதி பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கடந்த மாதமே விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 10-ந் தேதி அந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதலே விவசாயிகள், அந்த கொள்முதல் நிலையம் முன் நெல்லை கொண்டு வந்து குவித்தனர். ஆனால் 10-ந் தேதி கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் பெய்த மழையில் நெல் குவியல்கள் நனைந்து வீணாகின. இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த ராங்கியன்விடுதி பகுதி விவசாயிகள் நேற்று காலை கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன் திரண்டனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்றும், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லாவிடம் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்