ஊரடங்கால், வேலை பறிபோன விரக்தியில் கோட்டூர் வாலிபர், குவைத்தில் தற்கொலை

ஊரடங்கால், வேலை பறிபோன விரக்தியில் கோட்டூர் பகுதியை சேர்ந்த வாலிபர் குவைத் நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி அவருடைய பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-06-16 00:51 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி தாதன்திருவாசல் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 35). இவருக்கு மணிமேகலை(31) என்ற மனைவியும், அபிநயா(7) என்ற மகளும் உள்ளனர். ராஜ்குமார், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத் நாட்டில் உள்ள கெய்தான் பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் ஊருக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இவர் ஊருக்கு வருவதற்கு விமான டிக்கெட் முன் பதிவு செய்தார். இந்த நேரத்தில் கொரோனா நோய் தொற்று பரவியதால் குவைத் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவரால் ஊருக்கு திரும்பி வர முடியவில்லை. அதேநேரம் ராஜ்குமாரின் வேலையும் பறிபோனது. அங்கு தன்னுடன் தங்கி இருந்த நண்பர்களிடம் வேலை பறிபோய் விட்டது, கையில் பணம் இல்லை, குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை என விரக்தியுடன் பேசி வந்தார்.

கடந்த 5-ந் தேதி முதல் ராஜ்குமார், தாதன்திருவாசல் கிராமத்தில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை.

சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்குமாரை காணவில்லை என்றும் தகவல் பரவியது. அவருடைய நண்பர்கள் அங்கு அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குவைத்தில் தான் தங்கி இருந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

சோகத்தில் கிராமம்

இந்த தகவலை நண்பர்கள் தாதன்திருவாசல் கிராமத்தில் உள்ள பெற்றோருக்கு தெரிவித்தனர். இதனால் அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ராஜ்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக குவைத் நாட்டில் வேலை பறிபோன விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது கோட்டூர் பகுதியை சேர்ந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்