தஞ்சையில், வீட்டிற்கு தீ வைப்பு: மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் புகார்

தஞ்சையில், வீட்டிற்கு தீ வைத்ததில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-06-16 01:11 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கீழவஸ்தாசாவடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா(வயது 40). இவர் தனது மகன், மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரேமா தனது 2 குழந்தைகள் மற்றும் வயதான தாய், தந்தையுடன் கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை பிரேமா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டு இருந்த வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு எழுந்த பிரேமா, தனது குழந்தைகள் மற்றும் பெற்றோரை எழுப்பி வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தார்.

20 பவுன் நகைகள் உருகியது

மேலும் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களையும் வெளியே தூக்கி வந்தார். மற்ற பொருட்களை எடுப்பதற்குள் தீ மள மளவென வீடு முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சம்பலானது.

இது குறித்து பிரேமா கூறும்போது, தனது 15 வயதான மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 20 பவுன் நகைகள் தீயில் உருகி விட்டது. பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் பிற பொருட்கள் எல்லாம் முழுமையாக எரிந்து விட்டதாக தெரிவித்தார்.

7 பேர் மீது வழக்கு

பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரேமாவுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த பிரச்சினை காரணமாக திட்டமிட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டதாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரேமா புகார் அளித்தார். அதன்பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்