நிலம் வாங்கி தருவதாக டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.67½ லட்சம் மோசடி தந்தை-மகன் கைது

நிலம் வாங்கி தருவதாக டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.67½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-16 01:29 GMT
பட்டுக்கோட்டை,

சென்னை கொளத்தூர் விடுதலை நகரில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் சக்திவேல் (வயது 43). இவரிடம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த தமிழரசன்(66) என்பவர், சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டையில் நிலம் வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய சக்திவேல், தமிழரசனுடன் பெரியகோட்டைக்கு சென்று நிலத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள 37 ஏக்கர் 43 செண்ட் நிலத்தை ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கு வாங்கலாம் என்று தமிழரசன் கூறி உள்ளார். இதையடுத்து சக்திவேல் அட்வான்ஸ் தொகையாக ரூ.67 லட்சத்து 50 ஆயிரத்தை தமிழரசனிடம் கொடுத்தார்.

திடீர் மாயம்

பிறகு பத்திரம் பதிவு செய்வதற்காக சக்திவேலை, தமிழரசன் சிவகங்கை அழைத்து சென்றார். அப்போது நிலத்தின் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் தொகையை தமிழரசன் கொடுக்கவில்லை என்பது சக்திவேலுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் அட்வான்ஸ் தொகையை தான் விடுதியில் வைத்திருப்பதாகவும், அதை எடுத்து வருவதாகவும் சக்திவேலிடம் கூறிவிட்டு தமிழரசன் அங்கிருந்து சென்றார்.

ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. மாயமாகி விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த சக்திவேல், கடந்த 13-ந் தேதி தமிழரசன் வீட்டுக்கு சென்று நிலத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தருமாறு கேட்டார்.

தந்தை-மகன் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன், அவருடைய மகன் பிரபாகரன்(29) ஆகிய இருவரும் சக்திவேலை கீழே தள்ளி அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கினர். இதுகுறித்து டிராவல்ஸ் உரிமையாளர் சக்திவேல், பட்டுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், அவருடைய மகன் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்