குமரி மீனவர் வெளிநாட்டில் சாவு உடலை கொண்டு வர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு

குமரி மீனவர் வெளி நாட்டில் இறந்தார். அவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு கொடுத்தார்.

Update: 2020-06-17 20:30 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்மிடாலம் 12-வது அன்பியத்தை சேர்ந்தவர் சேவியர் என்ற மரிய டார்வின் (வயது 42), மீனவர். இவருடைய மனைவி லேன் மங்கேஷ்கா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மரிய டார்வின் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில், ஓஸ்கா என்ற பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மரிய டார்வின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் லேன் மங்கேஷ்காவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் கதறி அழுதார்.

மனு

இந்த நிலையில் லேன் மங்கேஷ்கா, நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் சவுதி அரேபியாவில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் 15-ந்தேதி அங்கு இறந்து விட்டார். எனவே என்னுடைய கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்