மராட்டியத்தில் பருவமழை தீவிரம் - மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம்

மராட்டியத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதன் மூலம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-06-18 23:58 GMT
மும்பை, 

மராட்டியத்தில் சமீபத்தில் நிசர்கா புயலால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை ெதாடங்கியது.கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நகரின் பல பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மும்பையில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

மும்பையை போல தானே, நவிமும்பை, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதன் மூலம் மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது.

போக்குவரத்து துண்டிப்பு

பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

கோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல சாலைகள் மழை நீரில் மூழ்கின. மாவட்ட மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் பலவற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோலாப்பூர் விமான நிலையத்தை இணைக்கும் உஜ்லேவாடி நெடுஞ்சாலை மூடப்பட்டது.

கட்டிடங்கள் இடிந்தன

இந்தநிலையில் பலத்த மழை காரணமாக குர்லா மெக்தாப் சொசைட்டியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

இதையடுத்து அதில் இருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே ஜோகேஸ்வரி, மேக்வாடி பகுதியில் ஒரு சால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், மாநகராட்சியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் காயம்

இந்த விபத்தில் சாகிரா சேக்(வயது22), தவுசீப் சேக்(28), பாத்திமா குரேஷி(60) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் உடனடியாக அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தானே சிராக் நகர் பகுதியில் ரெய்மண்ட் நிறுவனத்தின் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த வார இறுதி வரை மும்பையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்