திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கோவில் நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் கொள்ளை - பொன்னமராவதியில் 5 பேர் சிக்கினர்

திண்டுக்கல் அருகே கோவில் நிர்வாகி வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகைகள், ரூ.35 லட்சத்தை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. அவர்களில் 5 பேர் பொன்னமராவதியில் சிக்கினர். பட்டப்பகலில நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-06-19 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் துரை ஆதித்யன் (வயது 62). சுக்காம்பட்டி சித்தர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் இவர், திருவேங்கட மலைச்சாமி சித்தர் ஆலயம் என்ற கோவில் கட்டி அதை நிர்வகித்து வருகிறார். இதுதவிர அவர், கட்டிடங்கள் கட்டுவதற்கான வாஸ்து சாஸ்திரமும் செய்து வருகிறார். இந்த கோவிலுக்கு அருகிலேயே துரை ஆதித்யன் சொந்தமாக வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் துரை ஆதித்யன், தனது மனைவி ரேவதி, மகள் வித்யா, மகன் மனோஜ் மற்றும் மருமகன் ரமேஷ் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், துரை ஆதித்யனை சந்தித்து பேச வேண்டும் என்று கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தனர். உடனே அந்த நபர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து, துரை ஆதித்யனின் குடும்பத்தினரை மிரட்டினர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டிய அவர்கள், துரை ஆதித்யனின் கையை மட்டும் பிளாஸ்டிக் டேப்பால் கட்டி போட்டனர்.

பின்னர் அந்த கும்பல், வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் அலமாரிகளை உடைத்து ரூ.35 லட்சம் மற்றும் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்தது. இதையடுத்து வீட்டில் இருந்த அனைவரையும் வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டி விட்டு அந்த கும்பல் நகை, பணத்துடன் தப்பியோடியது. இதையடுத்து ஆதித்யன் குடும்பத்தினர் வீட்டுக் குள் இருந்தபடி அபயகுரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், துரை ஆதித்யன் வீட்டை திறந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு காரில் தப்பியவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொன்னமராவதி போலீசார் அவர்களை சல்லடை போட்டு தேடினர். இந்தநிலையில் அங்குள்ள தச்சம்பட்டி பகுதியில் கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் மடக்கினர். அப்போது காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று 5 பேரை பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். காரில் அவர்கள் கடத்தி வந்த பணம், நகைகள் அப்படியே இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த அஜீத்(20), சந்தோஷ்(23), கல்யாணசுந்தரம்(35), செல்லபாண்டியன்(22), கலைஞானம்(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி சென்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து 54 பவுன் நகைகள், ரூ.35 லட்சத்து 6 ஆயிரத்து 949 ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டுபாராட்டினார்.

மேலும் செய்திகள்