புழல் சிறை கைதிக்கு கொரோனா உறுதி

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நரம்பு சம்பந்தமான நோயால் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-06-22 22:49 GMT
செங்குன்றம், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாரதி நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபர், அப்பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். அவர் நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த மே மாதம் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

புழல் சிறையில் இருந்து சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில் ஏற்கனவே வார்டர்கள், கைதிகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை தாசில்தார்

சென்னையை அடுத்த மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 52 வயதான துணை தாசில்தாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் நடத்திய பரிசோதனையில் அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துணை தாசில்தாரின் மனைவி, திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாதவரம் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்து வந்த 48 வயதான கிராம உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த 13 ஆயிரத்து 46 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 262 பேருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் கத்தாரில் இருந்து வந்த ஒருவருக்கும், நைஜீரியாவில் இருந்து வந்த 2 பேருக்கும் என மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து 720 விமானங்களில் வந்த 45 ஆயிரத்து 502 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உள்நாட்டு முனையம் வந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்