தஞ்சையில், பட்டப்பகலில் பயங்கரம்: காரை வழிமறித்து தொழில் அதிபர் ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொலை

தஞ்சையில், காரை வழிமறித்து தொழில் அதிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொன்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-06-26 00:58 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை-திருச்சி சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலத்தின் மேல் நேற்று மதியம் 2.30 மணி அளவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சற்று தொலைவில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியவாறு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், வல்லம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன்(வல்லம்), கழனியப்பன்(தஞ்சை தாலுகா) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

காரில் ரத்தக்கறை

கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் பேண்ட் பையில் இருந்த மணிபர்சை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் யூசுப் என்பதும், தஞ்சை அருகே உள்ள விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த காரின் முன்பக்க சீட்டில் ரத்தக்கறை இருந்தது. பின்பக்க இருக்கை அருகே வெள்ளை கலர் ஒற்றை செருப்பு ரத்தக்கறையுடன் இருந்தது.

கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:-

மதம் மாறி உள்ளார்

கொலை செய்யப்பட்ட ஜோசப் என்கிற யூசுப் மனைவி பெயர் அசிலா என்கிற ரசியா. அசிலா, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 13 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். திருமணமான சில வருடங்களுக்கு பிறகு ஜோசப் முஸ்லிமாக மதம் மாறி யூசுப் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

தஞ்சை விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். யூசுப், குவைத் நாட்டில் உள்ள ‘ஷாப்பிங் மால்’ ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி தஞ்சையில் இருந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் ஊட்டியில் உள்ள கான்வென்டில் படித்து வந்துள்ளனர்.

மனைவி மீது பரபரப்பு புகார்

கடந்த 2018-ம் ஆண்டு குவைத்தில் இருந்து தஞ்சைக்கு வந்த யூசுப், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது மனைவி தஞ்சை விளார் சாலையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்த ஒருவருடன் கூட்டு சேர்ந்து தனது வங்கி லாக்கரில் இருந்த நகைகளையும், கணக்கில் இருந்த லட்சக்கணக்கான பணத்தையும் அபகரித்து உள்ளதாக கூறி இருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், யூசுப் மனைவி அசிலா என்கிற ரசியாவை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். பின்னர் யூசுப் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். தற்போது வரை கோர்ட்டில் அந்த வழக்கு நடந்து வருகிறது. யூசுப், தஞ்சை விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரில் தனியாக வசித்து வந்தார். அசிலாவும், குழந்தைகளும் திருச்சியில் வசித்து வருவதாக தெரிகிறது.

பல்வேறு கோணங்களில் விசாரணை

யூசுப் வசித்து வரும் வீட்டில் சமையல் செய்ய ஒரு பெண் வந்து செல்வார். அவரை தவிர டிரைவரோ, பணி ஆட்களோ அந்த வீட்டில் இல்லை. யூசுப், பைனான்ஸ் தொழிலும், குருங்குளம் அருகே விவசாய பண்ணை வைத்து விவசாயமும் செய்து வந்துள்ளார். பல சொத்துகள் மூலம் வாடகை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலத்தின் மேலே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காரை யூசுப் ஓட்டி வந்தாரா? அவருடன் காரில் வேறு யாரேனும் வந்தனரா? காரில் இருந்தவர்களே அவரை கொலை செய்தனரா? அல்லது காரை யூசுப் ஒட்டி வந்தபோது வேறு யாரும் காரை வழிமறித்து அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி நின்றுள்ளது. கார் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் யூசுப் கொலை செய்யப்பட்டுகிடந்துள்ளார்.

எனவே வெட்டுக்காயங் களுடன் காரில் இருந்து இறங்கி அவர் தப்பிச் செல்ல முயன்றபோது மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று தெரிவித்த போலீசார், கார் நின்ற இடத்தில் இருந்து யூசுப் கொலை செய்யப்பட்டு கிடந்த இடம் வரை சாலையில் ரத்தக்கறை உள்ளதால் அவரை ஏற்கனவே காரில் வைத்து வெட்டி உள்ளது தெளிவாக தெரிவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை அமைப்பு

இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் நேற்று மதியம் சரக்கு ஆட்டோ ஒன்று நின்று இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே கொலை நடப்பதற்கு முன்பாகவே கொலையாளிகள் வந்து இடத்தை நோட்டமிட்டு சென்றனரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக திருச்சியில் உள்ள யூசுப்பின் மனைவியை போலீசார் விசாரணைக்காக வல்லம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில், பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்