மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கவர்னர் மாளிகை முன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் தர்ணா

மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கவர்னர் மாளிகை முன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-26 01:59 GMT
புதுச்சேரி,

புதுவையில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மீனவர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதே கோரிக்கைக்காக சட்டசபை அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கருப்புக்கொடி ஏந்தி நேற்று சட்டசபை வளாகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்றனர். ஆனால் யாரும் செல்ல முடியாத வகையில் அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் அவர்கள் ரோட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசையும், கவர்னரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தெரியவந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதீஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களை கவர்னர் அழைத்து பேசினால் தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரதீஷா கோத்ரா கவர்னர் மாளிகையில் அதிகாரிகளுடன் பேசிவிட்டு எம். எல்.ஏ.க்களிடம் வந்து கவர்னர் இன்று (வெள்ளிக்கிழமை) தங்களை அழைத்து பேசுவதாக தெரிவித்து இருப்பதாக கூறினார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை விட கொடியது

மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண வழங்க அரசு மறுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 23 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 8 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க மறுப்பது நியாயமற்ற செயலாகும். இந்தியா முழுவதும் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அந்தந்த மாநில அரசுகள் வழங்கி விட்டன. ஆனால் புதுச்சேரி அரசின் முரண்பட்ட நிர்வாகத்தால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு உள்ள இந்த நேரத்தில் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மீனவர்களுக்கு நிவாரணத்தை தடுப்பது கொரோனாவை விட கொடியதாகும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கெல்லாம் அமைச்சரவையை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி அறிக்கை விடும் முதல்-அமைச்சர் மீனவர்களுக்கான உதவித்தொகை பற்றி ஏன் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்