சிவகங்கை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-26 03:18 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று சிவகங்கை பகுதியை சேர்ந்த 3 ஆண் மற்றும் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண், 3 பெண்கள், டி.ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு ஆண், காரைக்குடி, ராமநாதபுரத்தை சேர்ந்த தலா ஒருவர், திருப்புவனத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. போலீஸ் நிலையத்திலும், காவலர் குடியிருப்பு பகுதியிலும் கிருமிநாசினி தெளித்து பேரூராட்சி பணியாளர்கள் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர்.

40 பேர் வீடு திரும்பினர்

இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்ததையடுத்து நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்