வேப்பந்தட்டையில் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி சாவு

வேப்பந்தட்டையில் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-06-26 22:39 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 45). இவரது மனைவி நீலஜோதி(40). இவர்களது மகள் சுமித்ரா(17). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை சுமித்ராவின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டனர். சுமித்ரா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மகளை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டின் அருகில் சின்னத்துரை என்பவரின் விவசாய கிணற்றின் அருகில் சுமித்ரா அணிந்திருந்த ஒரு செருப்பு கிணற்றின் மேல் பகுதியிலும் மற்றொரு செருப்பு கிணற்றுக்குள்ளும் விழுந்து கிடந்ததை கண்டனர்.

கிணற்றில் உடல் மீட்பு

இதனால் சந்தேகமடைந்த சுமித்திராவின் பெற்றோர் இதுகுறித்து உடனே அரும்பாவூர் போலீசாருக்கும், பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் தண்ணீரில் மூழ்கி தேடிப்பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்து இறந்த நிலையில் சுமத்ராவின் உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ரா கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்