கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் திருச்சி எடப்பாடி பழனிசாமி பாராட்டு

கொரோனா தடுப்பு பணியில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2020-06-26 23:25 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரசை தடுக்கின்ற முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, திருச்சி மாவட்ட கலெக்டர் இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார். அவருடன் மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக செயல்பட்டு அதன் பரவலை தடுக்கின்ற ஒரு நிலையை பார்க்கிறோம்.

அரசு காட்டிய வழியில்...

உலகளாவிய வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கின்ற கால கட்டத்தில் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து நாம் கட்டுக்குள் வைத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சந்திரசேகர், செய்தித்துறை இயக்குனர் சங்கர், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமி, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டிடங்கள் திறப்பு

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் ரூ.25 கோடியே 53 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்