தேன்கனிக்கோட்டை அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2020-06-27 00:13 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் தெலுங்கு சமூக அறிவியல் ஆசிரியரான வினோத்குமார் என்பவர் தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 19-ந்தேதி பாதிக்கப்பட்ட ஆசிரியையின் கணவர் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் கல்வித்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் கடந்த 23-ந் தேதி அந்தேவனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமையில் பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணி இடைநீக்கம்

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின்படி, ஆசிரியர் வினோத்குமாரிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்தனர். இதையடுத்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, முதன்மை கல்வி அலுவலர் முருகன், அவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆசிரியர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்