பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 52,377 பேரின் உடல்நிலையை கண்காணிக்க நடவடிக்கை முதன்மை செயலர் பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 52,377 பேரின் உடல்நிலையை மருத்துவத்துறை மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதன்மை செயலர் சந்தோஷ்பாபு கூறினார்.

Update: 2020-06-27 01:39 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக மருத்துவமனை, அரூர் பேரூராட்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள், காரிமங்கலம் பகுதியில் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குனர் ஆர்த்தி, தேசிய தகவல் மைய அலுவலர் ரகுபதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் தர்மபுரி மாவட்ட இணையதளத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை தினமும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான பக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதன்மை செயலர் சந்தோஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

தர்மபுரி மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12,518 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான பணிகளை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக உள்ள மாவட்டமாக தர்மபுரி உள்ளது பாராட்டுக்குரியது. ஆய்வின்போது மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் முககவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 52,377 பேரின் உடல்நிலையை மருத்துவத்துறையினர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறித்து அனைத்து விவரங்களையும் தினந்தோறும் தர்மபுரி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்ய புதிய இணையதள பக்கம் தமிழக அளவில் முதல் முறையாக தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் படிப்படியாக அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்