கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய், மகள்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய், மகள்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-28 01:47 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜீவா நகரை சேர்ந்த 32 வயது ஆண், சஸ்டி அவன்யூ பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், துவாரகா நகரை சேர்ந்த 43 வயது பெண்ணுக்கும், அவர் மூலம் அவரது, 11 மற்றும் 9 வயது மகள்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐதராபாத்தில் இருந்து வந்த பர்கூர் பகுதியை சேர்ந்த, 37, 35, 26, 25, 35 வயதுடைய 5 ஆண்களுக்கும், பெங்களூருவில் இருந்து வந்த சிங்காரபேட்டையை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்த 27 வயது ஆணுக்கும், சென்னையில் இருந்து தளி அடுத்த பேளகொண்டப்பள்ளிக்கு வந்த 34 வயது ஆணுக்கும் என நேற்று மட்டும் மொத்தம் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

123 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி வரையில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 26-ந் தேதி 23 பேருக்கும், நேற்று 13 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்