டெங்கு காய்ச்சலால் பாதித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவருக்கு கொரோனா - ஆசிரியர் உள்பட 19 பேர் தனிமையில் வைப்பு

டெங்கு காய்ச்சலால் பாதித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், ஆசிரியர் உள்பட 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-06-28 02:16 GMT
ஹாசன், 

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா மல்லிபட்டணா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் 15 வயது சிறுவன். இந்த சிறுவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டான். இதனால் அந்த மாணவன் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்திய போது அந்த மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்காக அந்த மாணவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே மாணவனிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கை சில நாட்களில் சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. அதில் மாணவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் அந்த மாணவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த மாணவனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவன் மீண்டும் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். அப்போதும் அந்த மாணவனிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த மாணவன் மல்லிபட்டணாவில் தான் படித்து வரும் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வை எழுத சென்று இருந்தான். இதற்கிடையே அந்த மாணவனின் மருத்துவ அறிக்கை சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. அதில் அந்த மாணவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர் உடனடியாக மல்லிபட்டணாவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றனர். தேர்வு எழுதி முடித்ததும் அந்த மாணவனை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மாணவனுடன் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுதிய 6 மாணவிகள், 12 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 19 பேரிடம் இருந்தும் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் மல்லிபட்டணாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஹாசன் மாவட்ட கலெக்டர் ஆர்.கிரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா பாதித்த மாணவருக்கு தனி அறை ஒதுக்காதது ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனவால் பாதித்த மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளான். அப்போது அவனுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட கொரோனா பரிசோதனையில் அவனுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் அந்த மாணவனுக்கு தனி அறை ஒதுக்கவில்லை. தேர்வு எழுத வந்த அந்த மாணவனுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதும் அந்த மாணவனின் உடல்நிலை சீராக தான் இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். இதனால் மீதம் உள்ள தேர்வுகளை அந்த மாணவனால் எழுத முடியாது. இதுபோல அந்த மாணவனுடன் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளையும் தனிமைப்படுத்தி உள்ளோம். அரசு அனுமதித்தால் அவர்கள் தேர்வு எழுதுவார்கள். இல்லாவிட்டால் கொரோனா பாதித்த மாணவனுக்கும் மற்ற மாணவ, மாணவிகளும் துணை தேர்வு எழுது வாய்ப்பு வழங்கப்படும்.

மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் மூலம் பரவிய கொரோனா தற்போது பெங்களூருவில் இருந்து வந்தவர்களாலும் பரவி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்