தேனி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி-மகள்கள் உள்பட மேலும் 42 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி, மகள்கள் உள்பட மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-06-28 03:28 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31 போலீசார் உள்பட மொத்தம் 493 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில், நேற்று மேலும் 42 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பெரியகுளம் பகுதியில் அரசு மருத்துவமனை ஊழியர், நகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் 2 பேர், 2 வயது பெண் குழந்தை, குழந்தையின் தந்தை உள்பட மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தேனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயமங்கலம் வரதராஜ் நகரை சேர்ந்த பெண் அலுவலர், தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர், தேவதானப்பட்டியை சேர்ந்த 35 வயது நபர் மற்றும் க.புதுப்பட்டியில் தாய், 2 மகள்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் குடும்பம்

தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி, 2 மகள்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் போடியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு பாதிப்பு உறுதியாகவில்லை. இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

கம்பத்தில் அரசு மருத்துவமனையின் தற்காலிக பணியாளர், 27 வயது கர்ப்பிணி ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போடியில் 55 வயது பெண் உள்பட 6 பேருக்கும், போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் 29 வயது கர்ப்பிணி மற்றும் விசுவாசபுரம், டொம்புச்சேரி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

535 ஆக உயர்வு

ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி, கொத்தப்பட்டி, மணியகாரன்பட்டி, கன்னியப்பப்பிள்ளைப்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும், பழனிசெட்டிபட்டி, போடேந்திரபுரம், குள்ளப்பகவுண்டன்பட்டி, சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 3 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 151 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்