முதல்-அமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா: சட்டசபை வளாகம் வெறிச்சோடியது

முதல்-அமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 நாட்கள் மூடப்பட்டதையொட்டி சட்டசபை வளாகம் வெறிச்சோடியது.

Update: 2020-06-29 03:10 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் வேகமாக பரவி வருவதால் இதுவரை 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து 252 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 385 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அமைச்சரின் அலுவலக ஊழியருக்கு தொற்று ஏற்பட்டது. அங்கு பூக்கள் வினியோகித்த வியாபாரி ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். தற்போது முதல்-அமைச்சர் அலுவலக ஊழியருக்கும் தொற்று இருப்பது சட்டசபையில் பணியாற்றும் ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சட்டசபை வெறிச்சோடியது

இந்தநிலையில் சட்டசபை முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தொற்றால் பாதிக்கப்பட்ட சட்டசபை ஊழியர் வசித்து வந்த உருளையன்பேட்டை கண்ணகிதெரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்- அமைச்சர் நாராயணசாமி வழக்கம் போல் நேற்று முன்தினம் சட்டசபைக்கு வந்து அலுவலக பணிகளை கவனித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சரின் அலுவலகம் உள்பட சட்டசபை வளாகத்தை 2 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பிற்பகல் முதல் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முதல்-அமைச்சர், அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால் நேற்று யாரும் வராததால் சட்டசபை வளாகம் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்