மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது நாராயணசாமி திட்டவட்டம்

மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-06-29 03:28 GMT
புதுச்சேரி,

புதுவையில் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 5-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக புதுவையில் கொரோனா அதிக அளவில் பரவுவதை தடுத்து நிறுத்தி உள்ளோம்.

இருந்தபோதிலும் கடந்த 25 நாட்களாக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 3 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை. அவர்கள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், விவசாய தொழில் செய்பவர் இதை கடைபிடிக்க வேண்டும்.

ஒழிக்க முடியாது

விதிமுறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது. எல்லைப் பகுதிகளை கட்டுப்படுத்தி வெளி மாநிலத்தவர் தொற்று அதிகம் பரவுவது தடுத்து உள்ளோம். அதேபோல் குறுக்கு வழிகளையும் கண்காணித்து வருகிறோம்.

எனது அலுவலகத்தில் கூட ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிவது போன்றவற்றை செய்தால் தான் கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். இந்த கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைவரும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்