கடந்த 3 மாதங்களாக வெறிச்சோடி கிடக்கும் ஊசிமலை காட்சிமுனை

கடந்த 3 மாதங்களாக ஊசிமலை காட்சிமுனை வெறிச்சோடி கிடக்கிறது.

Update: 2020-06-29 03:54 GMT
கூடலூர்,

நீலகிரியானது இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் ஊசிமலை காட்சிமுனை உள்ளது. இங்கிருந்து கூடலூர், முதுமலை, மசினகுடி, ஸ்ரீமதுரை வனப்பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்கண்ட காட்சிமுனையானது பராமரிப்பின்றி புதர்கள் நிறைந்து காணப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊசிமலை காட்சிமுனையை நடுவட்டம் வனத்துறையினர் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தனர். தொடர்ந்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெய்வமலை கிராம மக்களிடம் ஊசிமலை காட்சிமுனை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊசிமலை காட்சிமுனையை கண்டு ரசிக்க நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் கிடைக்கும் வருவாயை கிராம மக்கள் வனத்துறையிடம் செலுத்தி வந்தனர். இதனால் வனத்துறைக்கும் மாதந்தோறும் வருவாய் கிடைத்தது. மேலும் தெய்வமலை கிராம மக்களில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது.

வெறிச்சோடியது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்களை நம்பியும், சுற்றுலா பயணிகளை நம்பியும் பிழைப்பு நடத்தி வந்தவர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில் ஊசிமலை காட்சிமுனைக்கு செல்வதற்கு உள்ளூர் மக்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக ஊசிமலை காட்சிமுனை வெறிச்சோடி கிடக்கிறது.

வருவாய் இழப்பு

மேலும் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்று வந்த தெய்வமலை கிராம மக்களும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று வனத்துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஊசிமலை காட்சிமுனைக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் ஊரடங்கால் ஊசிமலை காட்சிமுனைக்கு செல்லும் சாலை மூடி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சீசன் காலத்தில் ரூ.8 லட்சம் வரை வருவாய் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது அந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்