சாத்தான்குளம் சம்பவம் பற்றி அவதூறு தகவல் சென்னையில், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் அதிரடி நடவடிக்கை

சாத்தான்குளம் சம்பவம் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வெளியிட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2020-06-29 05:12 GMT
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் தாக்குதல் நடத்தியதன் காரணமாக அவர்கள் இருவரும் இறந்து போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தையொட்டி சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், அடுத்த ‘லாக்அப்’ டெத்துக்கு(போலீஸ் விசாரணையில் சாவு) ஆள் கிடைத்து விட்டது என்பது போன்று சில கருத்துக்களை பதிவு செய்து அவதூறான தகவல்களை வெளியிட்டிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

பணி இடை நீக்கம்

விசாரணையில் அந்த போலீஸ்காரர் பெயர் சதீஷ்முத்து (வயது 25) என்று தெரிய வந்தது. அவர் சென்னை ஆயுதப்படை போலீசில் பணியில் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்