வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் டாக்டர், நர்சுகள் உள்பட 126 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர், நர்சுகள், அரசு உதவி செயற் பொறியாளர் உள்பட 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதித்தவரின் எண்ணிக்கை 1,236 ஆக உயர்ந்தது.

Update: 2020-06-29 06:29 GMT
வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற் பொறியாளராக பணியாற்றி வரும் 55 வயது நபருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் செயற் பொறியாளரின் குடும்பத்தினருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.

அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், செயற் பொறியாளரின் மனைவி, 2 மகள்கள் மற்றும் அவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்த 46 வயது பெண் உதவி செயற் பொறியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உதவி செயற் பொறியாளரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட உள்ளன.

டாக்டர், நர்சுகளுக்கு கொரோனா

வேலூர் தனியார் மருத்துவமனை வளாகத்தில் தங்கி பணிபுரிந்து வந்த 40 வயது ஆண் டாக்டரும் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதே போன்று அதே மருத்துவமனையில் பணிபுரிந்த கொணவட்டம், சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 நர்சுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் தோட்டப்பாளையம் அருதம்பூண்டியில் ஒரே குடும்பத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் மற்றும் சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி பகுதிகளை சேர்ந்த 17 பேரும், 3-வது மண்டலத்தில் வேலப்பாடி, தொரப்பாடி பகுதிகளை சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்சு, வியாபாரிகள் உள்பட 20 பேரும், 4-வது மண்டலத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 15 பேரும், இடையன்சாத்தில் 1 வயது பெண் குழந்தை, அன்னக்குடியில் 3 வயது ஆண் குழந்தை உள்பட மாவட்டம் முழுவதும் 126 பேர் ஒரே நாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,236 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 126 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,236 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்