சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு மீண்டும் விசாரணை; தடயவியல் நிபுணர்களும் ஆய்வு

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-07-01 00:00 GMT
தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்து இருந்ததாக செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தந்தை, மகன் 2 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. கோவில்பட்டி முதலாவது மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில், அவர் கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை நடத்தினார். மறுநாள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார். அப்போது போலீசார் சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டுக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் திருச்செந்தூரில் சாட்சிகளிடம் அவர் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயராஜின் மனைவி செல்வராணி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மதியம் மீண்டும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தடயங்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு சம்பவ இடத்தில் இருந்த பெண் போலீஸ் உள்பட சிலரையும் அழைத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை வரை நடந்தது.

பின்னர் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினரை வரவழைத்து விசாரித்தார்.

அதேநேரத்தில் அனைத்து தடயங்களையும் பதிவு செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று காலையில் தடயவியல் பிரிவு துணை இயக்குனர் விஜயலதா தலைமையில், உதவி இயக்குனர் கலாலட்சுமி மற்றும் அலுவலர்கள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகனை தாக்கியதாக கூறப்படும் இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

ஏற்கனவே, மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் லத்தி, மேஜையில் ரத்தக்கறை இருந்ததாக கிடைத்த தகவலின்படி, அந்த தடயங்களையும் அதிகாரிகள் சேகரித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு தொடர்ந்து நடந்தது.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் புதிய இன்ஸ்பெக்டராக பெர்னார்டு சேவியர் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் 9 போலீஸ்காரர்களும் பணியில் சேர்ந்தனர். மேலும், மாஜிஸ்திரேட்டு விசாரணையையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்