தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

Update: 2024-04-28 07:46 GMT

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெயிலில் கொண்டு செல்ல முயன்ற பணம் ரூ.4 கோடி, நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு 2 முறை சம்மன் அனுப்பினர். இதற்கிடையே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆவணங்களை சிபிசிஐடி டி.எஸ்.பி. சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான லோகநாதன் பெற்றுக்கொண்டார். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்